இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்


இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 8:22 PM IST)
t-max-icont-min-icon

இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி தஞ்சையில், அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படடு வந்தது.

இந்த கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் ஆகியும் இதுவரையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வல்லம் நம்பர்–1 சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பஸ் பாஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இன்னும் வழங்கப்படவில்லை. பஸ் பாஸ் வழங்கினால்தான் மறியலை கைவிடுவோம் என்று மாணவ, மாணவிகள் கூறினர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு போக்குவரத்து கழக தஞ்சை கிளை மேலாளர்கள் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன், ராஜசேகர், முதுநிலை உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


பஸ் பாஸ் வழங்காததால் தினமும் ரூ.50 முதல் ரூ.60 வரை கூடுதலாக செலவு ஆகிறது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கல்லூரியில் படித்து வருகிறோம். எதற்காக பஸ் பாஸ் வழங்க மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் மறியலை கைவிடுவோம் என்று மாணவ, மாணவிகள் உறுதியாக தெரிவித்தனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள், இன்னும் 1 வாரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பித்துவிட்டு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம். பழைய பஸ் பாஸ் வைத்து இருப்பவர்கள் அதை காண்பித்தால் போதும். கண்டக்டர், டிரைவர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளோம். அடையாள அட்டை, பழைய பஸ் பாசை காட்டியும் பஸ்சில் இலவசமாக செல்ல கண்டக்டர்கள் அனுமதிக்கவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


அதிகாரிகளின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, பழைய பஸ் பாசை கண்டக்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடுகின்றனர். இதனால் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். இதனால் தான் மறியலில் ஈடுபட்டோம். ஒரு வாரத்திற்குள் பஸ் பாஸ் வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story