திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் டி.டி.வி. தினகரன் பேட்டி


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 26 Sep 2018 11:15 PM GMT (Updated: 26 Sep 2018 3:58 PM GMT)

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என டி.டி.வி. தினகரன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று 3–வது நாளாக மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டார். நேற்று மாலை திருப்பூண்டி உள்பட பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு பிரசார பயண நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக டி.டி.வி.தினகரன் வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பேசி வருவது அமைச்சர்களின் பயத்தை காட்டுகிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார். இடைத்தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் தயாராக இருக்கிறார்களா?


தமிழக அமைச்சர்கள் 33 பேரை எக்காரணம் கொண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்க்க மாட்டோம். சென்னையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் என் பெயரை அரசியல் செய்வதற்காக சேர்த்துள்ளனர்.

ஆறு, குளங்கள், வாய்க்கால்களை முறையாக தூர்வாரி தடுப்பணை கட்டியிருந்தால், தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை இருந்திருக்காது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிகோட்டகத்தில் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி யார் கையில் சென்றது? என தெரியவில்லை. நாகை–தஞ்சை சாலையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன், மாநில பொருளாளர் ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story