அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:15 AM IST (Updated: 26 Sept 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ஈழ தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க.–காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:– இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது மத்திய காங்கிரஸ் அரசில் இடம்பெற்றிருந்த தி.மு.க.வினர் பதவியை தக்க வைப்பதற்காக இனப்படுகொலையை தடுக்க முன்வரவில்லை. விடுதலை புலிகளை அழிக்க சோனியா காந்திக்கும், மத்திய அரசுக்கும் உதவியாக இருந்ததன் மூலம் தி.மு.க.வினர் சரித்திர பிழையை இழைத்துவிட்டனர். இதனை தற்போது ராஜபக்சே வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவின் ஆயுத உதவி மற்றும் ராணுவ உதவியால்தான் இலங்கையில் ஒருலட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர் என்று முன்னாள் அதிபரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் சக்திவாய்ந்த மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லியில் பாதுகாப்புத்துறை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து அவமதித்தது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. டெல்லியை ஆண்டாலும் தமிழகத்தில் ஆண்டிதான். பா.ஜ.க. அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் போர்குற்றவாளிகள். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:–

 எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சாதனையாக மாற்றக்கூடிய இயக்கம் அ.தி.மு.க., எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்து காணாமல் போய்விட்டார்கள். ஆனால், அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக இன்னும் நூற்றாண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும். தற்போது அனைத்து அ.தி.மு.க தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் அணிவகுத்து நிற்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டனர். தி.மு.க. ஈழ தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஒருபக்கம் காங்கிரசுடன் கூட்டணி. மறுபக்கம் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களை ஏமாற்றியது போல் டி.டி.வி.தினகரன் வேறு எங்கும் மக்களை ஏமாற்ற முடியாது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்.

இவ்வாறு பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், தலைமை கழக பேச்சாளர் சிட்கோ சீனு, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், ஆனிமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், முன்னாள் யூனியன் தலைவர்கள் ராஜேந்திரன், கடலாடி மூக்கையா, மாநில நிர்வாகி சதர்ன் பிரபாகரன், மாவட்ட பாசறை செயலாளர் என்ஜினீயர் பால்பாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் அங்குச்சாமி நன்றி கூறினார்.


Next Story