தெற்கு மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்


தெற்கு மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 26 Sept 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூரில் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாயல்குடி,

மூக்கையூர் பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மூக்கையூர் கிராமத்தில் துறைமுகம் இல்லாமல் இருந்ததால் இப்பகுதி மக்கள் தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் குடியேறி மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் துறைமுக பணிக்காக மத்திய–மாநில அரசின் நிதியாக ரூ.113 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகளில் பணிகள் முடித்து தர ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் துறைமுகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு துரிதமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோசப் கூறியதாவது:– மூக்கையூர் துறைமுகம் அமைவதால் எங்கள் ஊரில் இருந்து பல பகுதிகளில் தங்கி தொழில் செய்து வருகின்றனர். மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைய உள்ளதால் ஆழ்கடல் வரை மீன்பிடிக்க செல்ல வாய்ப்பாக இருக்கும். அதனால் தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம் பகுதியில் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி ஆழ்கடல் வரை சென்று மீன்பிடிக்க வாய்ப்பு இருப்பதால் அங்கு மீனவர்கள் எண்ணிக்கை குறையும்.

அதனால் அந்த பகுதிமக்கள் கச்சத்தீவு வரை செல்லவேண்டிய அவசியம் இருக்காது. ஆழ்கடல் வரை செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும். குறைந்த விலையில் மீன்களை வாங்க ஏதுவாக இருக்கும். இந்த துறைமுகத்தில் மீனவர்களின் தேவைக்காக மீன் இறங்கும் தளம், ஏலக்கூடம், மானிய விலையில் டீசல் வழங்க பங்க் அமைத்தல், கப்பல் பழுது பார்க்கும் இடம், 200 நாட்டுப்படகுகள் நிறுத்துவற்கான இடம் போன்றவை உள்ளன. மேலும் கடலில் 300 மீட்டருக்கு அலை தடுப்புசுவர் அமைக்கப்பட்டுஉள்ளது. விரைவில் மூக்கையூர் துறைமுக பணி முழுவதும் முடியும் நிலையில் உள்ளது.

இங்குள்ள அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அலையை தடுக்க பயன்படாமல் உள்ளது. இது மட்டுமே துறைமுகத்தின் குறையாக உள்ளது. அதனை நிர்வாகம் சரிசெய்து கொடுத்து இப்பகுதி மக்கள் இங்கு மீன்பிடிதொழில் செய்ய விரைந்து துறைமுகப்பணியை முடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story