நடுரோட்டில் பாலை கொட்டிய வியாபாரி
கேரள மாநிலத்துக்கு செல்ல போலீசார் அனுமதிக்காததால், நடுரோட்டில் வியாபாரி ஒருவர் பாலை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர், லோயர்கேம்ப், குமுளி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கூடலூர்-குமுளி மலைப்பாதையில் மாலை மாதாகோவில் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் 2 வாரங்களுக்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதன்காரணமாக கேரள மாநிலத்துக்கு வியாபாரம் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் தினமும் காலை, மாலை வேளையில் கேரள மாநிலத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான வியாபாரிகள், மோட்டார் சைக்கிள்களில் கேன்கள் மூலம் பாலை கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். சிலர் பஸ்களில் பாலை கொண்டு செல்கிறார்கள்.
இந்தநிலையில் வழக்கம் போல கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்வதற்காக, மோட்டார் சைக்கிள் மூலம் நேற்று அதிகாலையில் வியாபாரிகள் கேன்களில் பாலை கொண்டு சென்றனர். லோயர்கேம்ப் பஸ் நிலையம் அருகே சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மலைப்பாதை சீரமைப்பு பணி நடப்பதால் மோட்டார் சைக்கிளை அனுமதிக்க முடியாது என்றனர்.
இதனால் போலீசாரிடம், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், ஆவேசமடைந்த வியாபாரி ஒருவர் தான் கேனில் கொண்டு வந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் உத்தரவின்பேரில் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் மட்டும் சென்று வர போலீசார் நேற்று அனுமதி அளித்தனர். அதன்பிறகு வியாபாரிகள் கேரள மாநிலத்துக்கு பாலை கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story