முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
குலசேகரன்பட்டினம்,
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் நடக்கிறது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றவும், தசரா திருவிழாவுக்கு முன்பாக அனைத்து அடிப்படை வசதிகளையும் துரிதமாக நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், திருச்செந்தூர் தாசில்தார் தில்லைப்பாண்டி, மண்டல துணை தாசில்தார்கள் கோமதிசங்கர், குணசேகர், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமா சங்கர், உடன்குடி யூனியன் ஆணையாளர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் தாஹீர் அகமது, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story