விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்தில் வேளாண்மை கருவிகள்
மாதேப்பட்டியில் 33 விவசாயிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் வேளாண்மை கருவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை கண்காட்சி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு 33 விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்து 800 மதிப்பில் வேளாண்மை கருவிகள், உபகரணங்களை வழங்கி பேசியதாவது:-
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேளாண்மைத்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி தமிழகத்தில் விவசாய புரட்சியை ஏற்படுத்தினார். அதே போல சொட்டு நீர் பாசன தொழில்நுட்பத்தை அறிமுகப்படு்த்தி அந்த திட்டத்தை ஓசூர் தொரப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கினார்.
தற்போது இயற்கை விவசாயம், இயற்கை தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம், வேளாண்மை உபகரணங்கள் ஆகியவற்றின் உதவியோடு இன்றைக்கு 70 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி இலக்கை 1 கோடியே 10 லட்சம் டன்னாக உயர்த்தி உள்ளது. இதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 4 விருதுகளை வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் மருந்துகளை உபயோகித்து பயிர் செய்ததினால் நிலம் நச்சு தன்மை அடைந்து நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. இந்த நிலையை போக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு அரசு அனுமதியுடன் எடுக்க ஆணையிட்டார். அந்த வண்டல் மண்ணை நிலத்திற்கு இடுவதால் இயற்கை சத்து கிடைக்கிறது. தமிழக அரசின் தாரக மந்திரமான இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் என்ற வகையில் சிறப்பாக விவசாயம் செய்து தமிழக அரசு வழங்கும் வேளாண் உபகரணங்கள், சொட்டுநீர்் பாசன கருவிகள், அனைத்தையும் பெற்றும் நல்ல முறையில் வேளாண் உற்பத்தியை பெருக்கி பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்விஜயகுமார், பையூர் வேளாண்மை பல்கலைக்கழக தலைவர் தமிழ்செல்வன், முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், வேளாண்மை துணை இயக்குனர்கள் பிரதீப்குமார்சிங், அகண்டராவ், உதவி இயக்குனர் பச்சியப்பன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story