கூடங்குளம் போராட்ட வழக்குகளை சிறப்பு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்; தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


கூடங்குளம் போராட்ட வழக்குகளை சிறப்பு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்; தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:15 AM IST (Updated: 27 Sept 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த சுந்தரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நான் உள்பட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அமைதியான முறையில் தொடர் போராட்டங்களை நடத்தினோம். இதுதொடர்பாக கூடங்குளம், ராதாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 300–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. என் மீதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 248 வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. மீதமுள்ள வழக்குகளின் விசாரணை நாங்குநேரி, வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் ஏராளமான மீனவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாங்குநேரி மற்றும் வள்ளியூர் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணம் செய்து விசாரணையின்போது ஆஜராகி வருகிறோம். இதனால் நிறைய பயண செலவு செய்ய வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அலைவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க கூடங்குளம் அல்லது ராதாபுரத்தில் சிறப்பு கோர்ட்டுகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Next Story