ஆன்லைன் விற்பனையை தடைசெய்யக்கோரி மருந்து கடை உரிமையாளர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்


ஆன்லைன் விற்பனையை தடைசெய்யக்கோரி மருந்து கடை உரிமையாளர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:00 AM IST (Updated: 27 Sept 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்யக்கோரி நாளை (வெள்ளிக்கிழமை) மருந்து கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நெல்லை, 

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்யக்கோரி நாளை (வெள்ளிக்கிழமை) மருந்து கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கருப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் விற்பனை

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பொதுமக்கள் மருந்தின் தரத்தினை அறிந்து கொள்ள முடியாது. பல மருந்துகள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ஆனால் ஆன்லைன் மூலம் வாங்கும் மருந்துகளை அப்படி வைத்திருக்க முடியாது.

மேலும் ஆன்லைன் விற்பனையால் சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆன்லைன் விற்பனையை தடைசெய்ய வேண்டும் என அகில இந்திய மருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த மாதம் மும்பையில் செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடையடைப்பு போராட்டம்

மேலும், அந்த கூட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் மருந்து கடைகள், மொத்த விற்பனையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 கடைகள் நாளை(வெள்ளிக்கிழமை) அடைக்கப்படும். எங்கள் உணர்வுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் மதிப்பு அளித்து ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை செய்ய வேண்டும். இல்லையெனில், டிசம்பர் மாதம் 3 நாட்கள் தொடர்ந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, நெல்லை மாவட்ட பொருளாளர் சங்கரவேல், செயல் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story