சூடாவதால் காதில் வலி: செல்போன் வாங்கியவருக்கு ரூ.38 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு


சூடாவதால் காதில் வலி: செல்போன் வாங்கியவருக்கு ரூ.38 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் சூடாகி காதில் வலி ஏற்பட்டதாக தாக்கல் செய்த புகார் மனு அடிப்படையில், செல்போன் வாங்கியவருக்கு ரூ.38 ஆயிரம் இழப்பீடு வழங்க கடை உரிமையாளருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவை,

செல்போன் சூடாகி காதில் வலி ஏற்பட்டதாக புகார் மனு தாக்கல் செய்ததால், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் போத்தனூரை சேர்ந்த பி.கோகுல கிருஷ்ணன் என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:–

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு பிரபல செல்போன் விற்பனை கடையில் கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17–ந்தேதி ரூ.25,200 செலுத்தி ஒரு செல்போனை வாங்கினேன். ஜூன் மாதம் 27–ந்தேதி செல்போனின் திரை பழுதானது. மீண்டும் செல்போன் இயங்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்ப்பு மையத்தை அணுகினேன். அவர்கள் பழுதை சரி செய்து தந்தனர். பின்னர் சில நாட்களில் செல்போன் சூடாகத்தொடங்கியது.

இதனால் எனக்கு காதில் வலி ஏற்பட்டு மருத்துவரை சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டது. மீண்டும், மீண்டும் பழுது ஏற்பட்டதால் செல்போனை வாங்கிய கடையில் திரும்ப கொடுத்து புதிய செல்போனை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் விற்பனை நிர்வாகத்தினர் எனது பிரச்சினையை கேட்கவில்லை. செல்போனை மாற்றித்தரவும் இல்லை. எனவே உரிய இழப்பீடு தர உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பாலச்சந்திரன், செல்போனுக்கு வாடிக்கையாளர் செலுத்திய தொகை ரூ.25,200–ஐ 9 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும், மனுதாரரின் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரத்தை செல்போனை விற்பனை செய்த கடை உரிமையாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story