என்ஜினீயருக்கு கொலை மிரட்டல்: காதல் மனைவியின் கள்ளக்காதலன் கைது கள்ளக்காதலியை போலீசார் மூலம் பிரித்ததால் ஆத்திரம்
பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதலியை போலீசார் மூலம் பிரித்த ஆத்திரத்தில் என்ஜினீயருக்கு கொலைமிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கடையம்,
பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதலியை போலீசார் மூலம் பிரித்த ஆத்திரத்தில் என்ஜினீயருக்கு கொலைமிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (வயது 30). இவரும் புங்கம்பட்டியை சேர்ந்த திவ்யா(27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் என்ஜினீயர்கள். இவர்களுக்கு ரோகித் என்ற மகன் உள்ளான்.
திருமணத்துக்கு பின் இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் வண்டிப்பெரியாறு அஞ்சுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(43) குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உண்டு.
கள்ளத்தொடர்பு
இந்த நிலையில் இருவரும் வேலைக்கு செல்லும்போது காலையில், ரவிச்சந்திரன் வீட்டில் மகனை விட்டு செல்வதும், மாலையில் வந்து அவனை வீட்டுக்கு அழைத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதற்கிடையில் சிவராமகிருஷ்ணனுக்கும், திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சூழலில் சிவராமகிருஷ்ணனுடான காதல் கசந்த திவ்யா, ரவிச்சந்திரனுடன் நெருங்கி பழகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சிவராமகிருஷ்ணன் அதிர்ந்து போயுள்ளார். திவ்யாவை அவர் கண்டித்துள்ளார். ஆனால் கள்ளத்தொடர்பை அவர் கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவிச்சந்திரன் மனைவி இறந்து விட்டார். இதனால் ரவிச்சந்திரனும், திவ்யாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையுடன் மீட்பு
இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை அழைத்து கொண்டு சிவராமகிருஷ்ணன் சொந்த ஊரான செட்டியூருக்கு வந்தார். ஆனால் செல்போன் மூலம் ரவிச்சந்திரனுடன் திவ்யா அடிக்கடி பேசி வந்துள்ளார். கடந்த 11-ந் தேதி திவ்யா திடீரென்று மாயமானார். இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கடையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் திவ்யா குழந்தையுடன் வண்டிப்பெரியாறு அஞ்சுமலை எஸ்டேட்டில் கள்ளக்காதலன் ரவிச்சந்திரனுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திவ்யா மற்றும் அவரது மகனை போலீசார் மீட்டு கடையம் அருகே புங்கம்பட்டியில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மிரட்டல்-கைது
நேற்று முன்தினம் தனது மகனை பார்க்க சிவராமகிருஷ்ணன் புங்கம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு கள்ளக்காதலியை தேடி ரவிச்சந்திரன் வந்துள்ளார். அங்குள்ள சர்ச் அருகில் சிவராமகிருஷ்ணனை, ரவிச்சந்திரன் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது கள்ளக்காதலியை போலீசார் மூலம் பிரித்ததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அவரை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார்.
Related Tags :
Next Story