மஞ்சூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
மஞ்சூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் லாக்கரில் இருந்த நகை, பணம் தப்பியது.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி கிராமத்தில் சுவாமி மகாலிங்கய்யா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை 9.30 மணிக்கு வங்கிக்கு திரும்பியபோது முன்பக்க கதவின் பூட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், எமரால்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வங்கிக்குள் சென்று போலீசார் பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடிக்க வங்கிக்குள் புகுந்த மர்ம ஆசாமிகளால் லாக்கரை திறக்க முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகும் கருவியை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாமல் போனதால், அதிலிருந்த நகை, பணம் தப்பியது என்றனர்.
இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால், நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் எமரால்டு பகுதியில் அடகு கடையில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வங்கி கொள்ளை முயற்சியிலும் அதே ஆசாமிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.