அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 8 லட்சம் கத்திரி நாற்றுகள் உற்பத்தி
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் புதிதாக 19 ஏக்கர் பரப்பில் ரூ.2 கோடி மதிப்பில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் புதிதாக 19 ஏக்கர் பரப்பில் ரூ.2 கோடி மதிப்பில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவைப்படும் மா, முந்திரி, கொய்யா ஒட்டு கன்றுகள் மல்லிகை பதியன்கள் மற்றும் காய்கறி நாற்றுகள், சாமந்தி பூ நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், தோட்டக்கலை துறை திட்டங்களில் பயன்பெறும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 8 லட்சம் கத்தரி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் மா, முந்திரி, கொய்யா, மல்லிகை பயிர்களுக்கு தாய் செடி பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து ஒட்டு கன்றுகள் தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
எனவே, அரியலூர் மாவட்ட விவசாயிகள் நமது மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.