திட்டங்களை முடக்கினால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்


திட்டங்களை முடக்கினால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:00 AM IST (Updated: 27 Sept 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் நான் மேற்கொள்ளும் திட்டங்களை முடக்கினால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி,


தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இந்த பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக நான் என்ன செய்துள்ளேன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ள அவர் இந்த மாவட்ட மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லவில்லை. காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் கோரிக்கை தொடர்பாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதற்காக நாங்கள் தொடங்கி உள்ள இயக்கத்தை அவர் குறை கூறி உள்ளார். இந்த திட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்திற்காக நான் 17 முறை மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து பேசி உள்ளேன். இதனால் ரெயில்வே துறை கடைசியாக வெளியிட்ட பட்ஜெட்டில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கும். அடிக்கல்நாட்டு விழாவிற்கு வருவதாக ரெயில்வே மந்திரி உறுதியளித்துள்ளார். மொரப்பூர்-தர்மபுரி ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை முதலில் ரூ.150 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆய்வுக்கு பின் திட்டமதிப்பீட்டு தொகை ரூ.350 கோடியாக உயர்ந்தது. மொரப்பூர்-தர்மபுரி ரெயில்பாதை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் 50 சதவீத பங்குதொகை ஒதுக்கீடு செய்யப்படாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மொரப்பூர்-தர்மபுரி ரெயில்பாதை இணைப்பு திட்டத்திற்கு மாநிலஅரசின் பங்குதொகையான ரூ.175 கோடியை தமிழக அரசிடம் இருந்து பெற்று தர உயர்கல்வித்துறை அமைச்சரால் முடியுமா?

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும் ஒரு தொழிற்சாலையை கூட தொடங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயர்கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் இருந்து அனைத்துமட்டங்களிலும் ஊழல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கான 90 சதவீத ஒப்பந்தங்களை அமைச்சரின் உறவினர்கள் சிலரும், அவருக்கு நெருக்கமாக உள்ள கட்சி பிரமுகர்கள் சிலரும் எடுத்து உள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.100 கோடி மதிப்பிலான டெண்டரும், ஊரகவளர்ச்சித்துறையில் ரூ.20 கோடிக்கான டெண்டரும் விரைவில் நடக்க உள்ளது. தர்மபுரி மாவட்ட கண்காணிப்புக்குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் மத்திய,மாநில அரசுகளின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளேன். பல்வேறு ஆவணங்களையும் சேகரித்து வருகிறோம்.

இவர்கள் செய்துள்ள ஊழல்கள் தொடர்பாக விரைவில் சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடக்கும் நிலை உருவாகும். தர்மபுரி தொகுதியின் எம்.பி.என்ற முறையில் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் நான் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் முடக்குகிறார்கள். இது சரியானதல்ல. இந்த நிலை தொடர்ந்தால் பின்விளைவுகள் கடுமையானதாக இருக்கும். நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டியின்போது கூறினார். 

Next Story