நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி 2–ந்தேதி உண்ணாவிரதம் - கதர்வாரிய ஊழியர்கள் அறிவிப்பு
நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி 2–ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கதர்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு ஊழியர் நல சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத்தலைவர் சேஷாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:–
கதர் துணிகளை மக்களிடம் பிரபலப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கிராமப்புற தொழில்களை ஊக்குவிப்பதும், அங்குள்ள ஏழை மக்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதே கதர் கிராம தொழில் வாரியத்தின் நோக்கமாகும்.
இதை முறையாக செயல்படுத்தினால் மத்திய கதர் கிராம தொழில் ஆணையம் புதுச்சேரி கதர் வாரிய வளர்ச்சிக்கும், கைவினைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கி கடனுக்கும் மானியம் அளிக்கும்.
இந்த வாரியம் 38 வருடங்களாக செயல்படுகிறது. இந்த வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் பதவியிடங்கள் எண்ணிக்கை 215 ஆகும். ஆனால் தற்போது நடைமுறையில் 155 ஊழியர்கள் தான் உள்ளனர். கடந்த 19 ஆண்டுகளாக புதிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. கதர் வாரியத்தின் அவலநிலைக்கு முழு காரணம் கடந்த கால தவறான நிர்வாக போக்கும், நிதி ஆளுமையுமே.
கடந்த ஜனவரி முதல் ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அரிசி, மளிகை சாமான்கள் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் போனது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. போராட்டங்கள் நடத்தியும் 9 மாத நிலுவை சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, கிராம தொழில் வளர்ச்சியை நடைமுறைப்படுத்தியும், புதுவை கதர் கிராம தொழில் வாரியத்தை காப்பாற்றும் பொருட்டும், ஊழியர்களின் 9 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2–ந் தேதி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.