ரூ.2.89 கோடி மதிப்பில் 6 அடுக்கு மாடி கட்டிடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கட்டப்படுகிறது
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பில் 6 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட இருக்கின்றது. அதில் 12 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் வரையிலான புறநோயாளிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் என தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுகாதாரத்துறை அவ்வப்போது புதிய கட்டிடங்களை கட்ட அனுமதித்து வருகிறது.
அந்தவகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் அலுவலகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்து இருக்கிறது. ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பில் 6 அடுக்குமாடி வசதிகளை கொண்ட கட்டிடமாக இது கட்டப்பட இருக்கிறது.
இதில் தீவிர சிகிச்சை பிரிவு, 12 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், சிறுநீரகவியல் துறை, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என பல்வேறு துறைகள் அமைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை அரங்குகள் ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது.
இடநெருக்கடி
புதிய கட்டிடத்துக்கு சி.எம்.டி.ஏ., கட்டுமான நிறுவனம், சுற்றுச்சூழல் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்டதும், வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்க இருப்பதாகவும், வருகிற 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கட்டிட பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி அதிகமாக இருப்பதால் புறநோயாளிகள் பிரிவு, சர்க்கரை நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் நோயாளிகளின் உறவினர்கள் வந்து செல்வதற்கு வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இதற்காக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘மருத்துவமனை விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அரசின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே மருத்துவமனையை ஒட்டி இருந்த காலி இடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அரசு அனுமதி அளித்ததும் அங்கு புறநோயாளிகள் பிரிவை பெரிய அளவில் சிறப்பாக கட்டப்படும்’ என்றனர்.
Related Tags :
Next Story