மாநில கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மாநில கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Sept 2018 5:00 AM IST (Updated: 27 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில், மாநிலக்கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி, 

சென்னையை அடுத்த ஆவடி கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). இவர் மாநில கல்லூரியில் விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் சென்னையில் இருந்து ஆவடிக்கு ரெயிலில் சென்றார். முகேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயாரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தார்.

இதனால் தாயாரிடம் பணம் வாங்குவதற்காக முகேஷ் ஆவடி பஸ் நிலையம் சென்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர், அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் அங்கிருந்து தப்பி முகேஷ் கோவில்பதாகை சாலையில் ஓடினார்.

அரிவாள் வெட்டு

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை மறித்து அதில் ஏறிச்சென்றார். சிலர் அரிவாளுடன் ஓடி வருவதை பார்த்ததும் வேன் டிரைவர் ஓ.சி.எப். மைதானம் அருகே வேனை நிறுத்தினார். இதையடுத்து வேனில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிய முகேசை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மடக்கி அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டினர். பின்னர் அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் முகேசை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேசை வெட்டிவிட்டு தப்பி ஓடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

முகேஷ் மீது ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும், முன்விரோதம் காரணமாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முகேசை வெட்டி இருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story