பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
பெரியபாளையத்தை அடுத்த ஆற்றுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரியப்பாக்கம் காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதானது. அந்த மின் மோட்டார் இதுவரை பழுது பார்க்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.
மறியல்
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலை அரியப்பாக்கம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story