கந்துவட்டி கேட்டு லாரி டிரைவர் குடும்பத்திற்கு மிரட்டல்
கந்துவட்டி கேட்டு லாரி டிரைவர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி தாலுகா வடகுச்சிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் அய்யனார் (வயது 36), லாரி டிரைவர். இவர் தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் வடகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2016-ல் சீட்டு கட்டினேன். அதற்காக அவருக்கு நான் கொடுக்க வேண்டிய ரூ.4 லட்சத்திற்கு ரூ.3 லட்சத்தை செலுத்தி விட்டேன். மீதமுள்ள ரூ.1 லட்சத்தை மட்டுமே நான் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக அவரும், அவருடைய ஆதரவாளர்கள் 7 பேரும் சேர்ந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி ரூ.5 லட்சம் மதிப்புள்ள எங்களுடைய வீட்டுமனையை எழுதி வாங்கிக்கொண்டனர்.
மேலும் எங்களிடம் கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டு அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதுபற்றி நான் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர்.
நாங்கள் போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த அவர்கள் 8 பேரும் இரவு நேரங்களில் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்தி கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுடைய வீட்டுமனையை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story