காதலி இறந்த துக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை


காதலி இறந்த துக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Sept 2018 3:30 AM IST (Updated: 27 Sept 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே காதலி இறந்த துக்கத்தில் என்ஜினீயர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், 


மரக்காணம் அருகே உள்ள ஏரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பிரசாந்த் (வயது 19). இவர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ஷாலினி என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும், இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ஷாலினி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாளே என்று பிரசாந்த் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இருந்த பிரசாந்த், வாழ்க்கையில்தான் ஒன்றுசேர முடியவில்லை, மரணத்திலாவது காதலில் வெற்றி பெறுவோம் என்று முடிவெடுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரசாந்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story