கள்ளக்காதலியிடம் பேசியதால் தொழிலாளி கொல்லப்பட்டது அம்பலம் - வாலிபர் கைது


கள்ளக்காதலியிடம் பேசியதால் தொழிலாளி கொல்லப்பட்டது அம்பலம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே கட்டிட தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை வேறு குரலில் பேசி வரவழைத்து கொன்று விட்டு தப்பிய வாலிபரை காதலியுடன் போலீசார் கைது செய்தனர்.

தூசி,

காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமம் குட்டை கார தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். ராஜாராம் கடந்த 23-ந் தேதி வேலைக்கு காஞ்சீபுரம் செல்வதாக மனைவியிடம் சொல்லி விட்டு காலை 8 மணிக்கு சென்றார். அன்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயந்தி, அவரது கணவர் ராஜாராமை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது ‘ஸ்விட்ச் ஆப்’ என வந்தது.

மறுநாள் காலை 7.30 மணிக்கு வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் போன் செய்து உனது கணவர் வெம்பாக்கம் அருகே பில்லாந்தாங்கல் கிராமம் மெயின்ரோட்டில் வெட்டு காயத்துடன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜெயந்தி, தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

காஞ்சீபுரம் மாவட்டம் அவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (29) என்பவருக்கும், தாயார்குளம் தெருவை சேர்ந்த சத்யா (30) என்பவருக்கும் 7 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக ராஜாராம், சத்யாவுடன் தொடர்பில் இருந்து உள்ளார். இதன் காரணமாக அடிக்கடி குமாருக்கும், ராஜாராமுக்கும் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதத்தினால் குமார் கடந்த 23-ந் தேதி அவருடைய 2-வது காதலியான காஞ்சீபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி (30) என்பவரை சத்யா குரலில் பேச வைத்து கீழ்நெல்லி பில்லாந்தாங்கல் சாலைக்கு இரவு 10 மணிக்கு ராஜாராமை வரவழைத்தார்.

சத்யாதான் பேசுகிறார் என நம்பிய ராஜாராம் அங்கு வந்தார். அந்த இடத்தில் மறைந்து இருந்த குமார் திடீரென அங்கு வந்து ராஜாராமை கையில் வைத்துள்ள கத்தியால் வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து குமாரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது காதலி தமிழ்ச்செல்வியையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story