வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:00 PM GMT (Updated: 26 Sep 2018 10:22 PM GMT)

நாமக்கல்லில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல், 


நாமக்கல்லில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்த ஊர்வலம் பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை வழியாக சென்று அம்மா உணவகம் அருகில் முடிவடைந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் 1.9.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. இச்சிறப்பு பணியின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை பதிவு செய்திட பெயர் சேர்த்தல் விண்ணப்ப படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வழங்கிட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிட படிவம்-7 மற்றும் வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள படிவம்-8, ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம்-8ஏ ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஊர்வலத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியம், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story