மராட்டிய சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவே பா.ஜனதா விரும்புகிறது
மராட்டிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவே பா.ஜனதா விரும்புகிறது என்று மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.
மும்பை,
மராட்டிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவே பா.ஜனதா விரும்புகிறது என்று மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.
சிவசேனாவின் அறிவிப்பு
நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணியை முறித்து கொண்டன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின.
இதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து கொண்டு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், தேசியவாத கட்சிகள் வருகிற தேர்தல்களில் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. பா.ஜனதா, சிவசேனா கட்சிகளை தோற்கடிக்கப்போவதாக அக்கட்சிகள் சூளுரை செய்துள்ளன.
இதனால் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்படும் என்று கருதிய பட்சத்தில், தனித்தே போட்டியிடுவோம் என்று சிவசேனா தொடர்ந்து கூறி வருகிறது.
இதுகுறித்து மராட்டிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் (பா.ஜனதா) நேற்று மும்பையில் நடந்த மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டணி வைக்கவே விருப்பம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவே பா.ஜனதா விரும்புகிறது. தேர்தல் கூட்டணி வைக்காவிட்டால் வாக்குகள் சிதறும். அது காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டு விடும். எனவே கூட்டணி விஷயத்தில் இனி சிவசேனா தான் முடிவு எடுக்க வேண்டும்.
பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றன. எனவே புள்ளி விவரங்கள் மூலம் பதிலடி கொடுக்க பா.ஜனதா தயாராகி வருகிறது.
மத்தியில் காங்கிரஸ் அரசின் 47 ஆண்டு ஆட்சியையும், பா.ஜனதாவின் 47 மாத ஆட்சியையும் ஒப்பிட்டு எங்களது கட்சி குறிப்பேட்டை தயார் செய்து வருகிறது. இதேபோல மராட்டியத்திலும் கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியையும், எங்களது ஆட்சியையும் ஒப்பிட்டு குறிப்பேட்டை தயார் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story