நடப்பாண்டில் 900 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு - கலெக்டர் ராமன் பேச்சு


நடப்பாண்டில் 900 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு - கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 26 Sep 2018 10:55 PM GMT (Updated: 26 Sep 2018 10:55 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 900 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

வேலூர் அண்ணா சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பச்சைப்பயறு கொள்முதல் மைய தொடக்கவிழா நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிரிஸ் சந்திரசிங், வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) மகேந்திர பிரதாப் தீட்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் விற்பனைக்குழு செயலாளர் தயாசங்கர்லால் ஸ்ரீவஸ்தவா வரவேற்றார்.

பச்சைப்பயறு கொள்முதல் மற்றும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி விளக்கி பேசினார். விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில் காரீப் பருவத்தின் கீழ் வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு சார்பில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படும். 5 மாவட்டங்களிலும் நடப்பாண்டில் 4 ஆயிரத்து 625 டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 900 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் மையத்தில் வாங்கப்படும் பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.69.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உள்ளூரில் விற்பனை செய்யும் விலையைவிட அதிகமானதாகும். தற்போது காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு வருகிற அக்டோபர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டுள்ள பச்சைப்பயறை அறுவடை செய்து கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யலாம். பச்சைப்பயறுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு போன்றவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொடுக்க வேண்டும். இங்கு விவசாயி ஒருவரிடமிருந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 750 கிலோ கொள்முதல் செய்யப்படும்.

இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யவே அடங்கல், சிட்டா உள்ளிட்டவை கேட்கப்படுகிறது. விவசாயிகள் அதிக பச்சைப்பயறை விளைவித்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுதாகர் நன்றி கூறினார்.



Next Story