சொத்து பத்திரம் பதிவு செய்யப்படாததை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சொத்து பத்திரம் பதிவு செய்யப்படாததை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டாததை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 30 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் சொத்துக்களை கிரயம் செய்ய, அடமானம் வைக்க, வில்லங்க சான்றிதழ் பெற என தினமும் இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர். இங்கு தினமும் சுமார் 20 கிரய பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சங்க பதிவு, திருமண பதிவு, பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் ஒப்பந்த பதிவுகள் போன்றவை இங்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கறம்பக்குடி சார் பதிவாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. மேலும் 2 எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பத்திரப்பதிவு மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகள் தாமதமானதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் கறம்பக்குடி பதிவு அலுவலகத்தில் சொத்துக்களை கிரயம் செய்யும்போது அரசு நிர்ணயம் செய்த தொகையை விட மிக கூடுதலாக செலவு ஏற்படுவதாகவும், இல்லையேல் பத்திரங்களை திரும்ப திருவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.


இந்நிலையில் கறம்பக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக சர்வர் செயல்படவில்லை என்று கூறி சொத்து பத்திரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தினமும் சார் பதிவாளர் அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள் நேற்றும் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படாததால் ஆத்திரமடைந்து சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கறம்பக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள சொத்து பத்திரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை உரியவர்களிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். சார் பதிவாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களின் சிரமங்களை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள கறம்பக்குடி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் மற்றும் சார் பதிவாளர்(பொறுப்பு) பாரதிதாசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story