பலத்த மழை: மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
சங்கராபுரம், செஞ்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, செஞ்சி பகுதியில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. மதியம் 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.
பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ¾ மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த மழையின் போது சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, செஞ்சி பகுதியில் மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் பலியாகி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்காணி கிராமத்தை சேர்ந்தவர் இளையாப்பிள்ளை மனைவி கொளஞ்சியம்மாள்(வயது 30). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்து விட்டு வந்திருந்தார். பின்னர் மாலையில் மீண்டும் தனது மாடுகளை ஓட்டிவர விளை நிலத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
இதில் மின்னல் தாக்கியதில் கொளஞ்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கொளஞ்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி கன்னியம்மாள்(55). இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மூங்கில்துறைப்பட்டு அருகே தொழுவந்தாங்கலுக்கு வந்தார். நேற்று மதியம் வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த போது மின்னல் தாக்கியதில் கன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், கடுவனூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே கோணை மதுரா சோமசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் மனைவி புனிதா(35). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்துக்கு சென்றார். அப்போது இடி-மின்னலுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் புனிதா வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் புனிதா உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் விளைநிலத்துக்கு விரைந்து வந்து புனிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story