போதிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்


போதிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

போதிய மழையின்றி பயிர்கள் காய்ந்து வருவதால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமையில் தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். அப்போது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் காய்ந்த கரும்பு தோகைகளை கலெக்டர் சாந்தாவிடம் காண்பித்து முறையிட்டனர்.

அப்போது விவசாயிகள் சார்பில் ராஜேந்திரன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழையின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருகிய பயிர்களை கணக்கெடுத்து, அதன் விவரத்தை தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த புள்ளி விவர அடிப்படையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.


போதிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும். வேப்பந்தட்டை தாலுகாவில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில், கல்லாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் இளைஞரணி செயலாளர் நீலகண்டன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சின்னமுட்லு நீர்த்தேக்கம் ஆகிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரெயில் போக்குவரத்து சேவை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி பதிவேட்டில் பதிந்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கரும்பு பயிருக்கு கட்டாயப்படுத்தி வசூலிக்கும் காப்பீட்டு தொகையை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இதையடுத்து கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் போதியளவு மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அனைவரும் கேழ்வரகு, கம்பு, கொத்தமல்லி ஆகிய பயிர்களை பயிரிடவும், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு வேளாண் துறை சார்பில் அளிக்கப்படும் பரிந்துரையை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

 முன்னதாக பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்க பரிந்துரைக்க வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டர் சாந்தாவிடம் மனு ஒன்றை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story