கோவை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக இருசக்கர வாகனம் வாங்க 3,700 பெண்களுக்கு மானியம்


கோவை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக இருசக்கர வாகனம் வாங்க 3,700 பெண்களுக்கு மானியம்
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 27 Sept 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக இருசக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப் படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற கோவை மாவட்டத்தில் 23 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் 155 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் கட்ட பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு 23 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில் 3 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடப்பாண்டில் 4 ஆயிரத்து 949 பேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஏற்கனவே 155 பேருக்கு மானியம் வழங்கப்பட்டு விட்டது.

2-ம் கட்டமாக 3 ஆயிரத்து 700 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்யும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். அதன்பின்னர் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் பெண்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story