செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆலங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
நெல்லை,
செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆலங்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு, போலீஸ் தடியடி சம்பவங்கள் நடைபெற்றன. கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையொட்டி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தமிழிசைக்கு அனுமதி மறுப்பு
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் செங்கோட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்தார்.
ஆனால் அவர் செங்கோட்டை பகுதிக்கு செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி சென்றால் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் குவிப்பு
இதையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நெல்லைக்கு வரும் வழியில் பாளையங்கோட்டை அருகே அரியகுளம் பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவருடன் வந்த பா.ஜனதாவினரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஆலங்குளம், செங்கோட்டை பகுதியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளித்தனர். இதனால் ஆலங்குளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
கண்டனம்
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கைதான அப்பாவி பொதுமக்கள், சிறுவர்கள் ஆகியோரை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். அதே செங்கோட்டையில் தான் பல பேர் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. டெல்லி செங்கோட்டையை கைப்பற்றிய எங்களுக்கு, நெல்லை செங்கோட்டையை கைப்பற்றுவது பெரிதல்ல. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது. ஆனாலும் பல்வேறு இடங்களில் இதனை சிறப்பாக நடத்தி முடித்தோம்.
பிரதமர் மோடியின் கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் ஒரு இடத்தில் கூட குண்டு வெடிப்பு கிடையாது. அந்த அளவுக்கு தீவிரவாதத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் பிரதமர் மோடி.
அமைதியை விரும்புகிறோம்
செங்கோட்டையில் எங்களால் பிரச்சினை வரக்கூடது என்பதற்காக ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஏனெனில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இந்த ஆர்ப்பாட்டம் முற்றுப்புள்ளி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறினார்.
கோரிக்கை மனு
பின்னர் செங்கோட்டையில் நடந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம், தமிழிசை சவுந்தரராஜன் மனு கொடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், மாவட்ட செயலாளர் அருள் செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆலங்குளம் நகர தலைவர் கணேசன், நகர பொதுச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
முன்னதாக, தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தை பொறுத்தவரை இந்துமத விழாக்களுக்கு எப்போதும் தடைகளும், முட்டுக்கட்டைகளும் வந்து கொண்டு இருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்பது பா.ஜனதாவின் கருத்து. செங்கோட்டையில் எங்கள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்றார்.
Related Tags :
Next Story