கோவை அருகே மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது


கோவை அருகே மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 28 Sept 2018 4:15 AM IST (Updated: 28 Sept 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துடியலூர்,

கோவை ஆனைக்கட்டி, மாங்கரை, சேம்புக்கரை உள்பட மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் சின்னதடாகம் ஊராட்சி இந்திராநகர் வழியாக கிளை கால்வாய் மூலம் கோவைக்கு செல்கிறது. இந்த நிலையில் சின்னதடாகம் சாலையில் இந்த கால்வாயின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் மிகவும் சேதமடைந்தது. எனவே அதை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கக் கோரி, பொதுமக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.3 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக பாலத்தையொட்டி தற்காலிக பாலம் மற்றும் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி, ஆனைக்கட்டி, தடாகம் பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மழைவெள்ளத்தில் தற்காலிகமாக போடப்பட்ட தரைப்பாலம் மற்றும் ரோடு அடித்து செல்லப்பட் டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அவர்கள் உஜ்ஜயனூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று சின்னதடாகம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் தற்போது மீண்டும் கனமழையாக பெய்ய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. இதனால், சேடல்பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்ல தொடங்கி உள்ளது. சோலையார் மின்நிலையம்-1 இயக்கப்பட்டு, மின்உற்பத்திக்கு பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. தோட்டங்களில் தேயிலை கொழுந்து விட்டு வளரத் தொடங்கி உள்ளன.

கனமழை பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாழைத்தோட்டம், கக்கன்காலனி குடியிருப்பு பகுதி மக்கள் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சோலையார் மின்நிலையம்-1 இயக்கப்பட்டு 395.49 கன அடித்தண்ணீரும், சேடல்பாதைவழியாக 16.75 கன அடித்தண்ணீரும், பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 421.06 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 160.11 அடியாக உள்ளது.

Next Story