தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நெல்லை,
தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை ‘தினத்தந்தி’ அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாநில துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநில இளைஞர் அணி செயலாளர் வேல்ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் உணர்வை...
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ஏழை-எளிய பாமர மக்களும் பத்திரிகை படிக்கவேண்டும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தினத்தந்தி நாளிதழை தொடங்கி எளிய தமிழில் நடத்தி மக்களிடம் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியது சி.பா.ஆதித்தனார் தான். இதேபோல் சட்டசபையில் திருக்குறளை வாசித்து சபை நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
செங்கோட்டையில் இந்துக்கள் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீசி கலவரத்தை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் போலீசார் இந்துக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை நள்ளிரவில் கைது செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
30 வருடங்களாக நடக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போலீசார் தேவையில்லாமல் தடை விதிப்பதை நிறுத்த வேண்டும்.
அரசு விழாவாக...
தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு அரசு இரண்டு படித்துறைகளில் அனுமதி இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து படித்துறைகளையும் சுத்தம் செய்து புஷ்கர விழா நடத்த வேண்டும். இந்த விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும். வருகிற 2-ந்தேதி புஷ்கர விழா சம்பந்தமாக நான் மீண்டும் நெல்லை வருகிறேன். அப்போது இதுபற்றி முழுமையாக ஆராயப்படும். இந்த புஷ்கர விழாவை எதிர்க்கின்ற ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story