அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு: பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்
மது விற்றதை கண்டித்த அண்ணன்-தம்பியை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்ய கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கங்கைகொண்டானில் குடியிருப்பு பகுதியில் மது விற்றதை கண்டித்த அண்ணன்-தம்பியை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்ய கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மது விற்பனை
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கலைஞர் காலனி அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 33). இலங்கை தமிழர். இவருடைய வீட்டுக்கு இலங்கையில் வசித்து வரும் இவருடைய தாய் அகிலாண்டம், தம்பி பிரேம்குமார் (29) ஆகியோர் சமீபத்தில் கங்கைகொண்டானுக்கு வந்தனர். அகிலாண்டத்துக்கு நெல்லையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக இலங்கையில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேந்திரகுமார் வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதைக்கண்ட ராஜேந்திரகுமார் தட்டிக்கேட்டுள்ளார். அங்கு மது விற்பனை செய்வதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.
அரிவாள் வெட்டு
சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், அவருடைய மகன்கள் நிதீஷ்குமார், கவுதம் உள்ளிட்டோர் ராஜேந்திரகுமாரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த பிரேம்குமாரையும் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிரேம்குமார் குடும்பத்தினர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்
இந்த நிலையில் ராஜேந்திரகுமாரின் தாய் அகிலாண்டம், அண்ணன் ரஞ்சித்குமார், சகோதரி நந்தகுமாரி மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசலில் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற கும்பலையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள், அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், அதுவரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறினர்.
மயங்கி விழுந்த பெண்கள்
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையில் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 ஆண்களை பிடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அப்போது அகிலாண்டம் மற்றும் அவருடைய மகள் நந்தகுமாரி ஆகியோர் திடீரென்று மயங்கி விழுந்தனர். அவர்கள் 2 பேர் முகத்திலும் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து 2 பெண்களையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து, கலெக்டரை நேரில் சந்தித்து பேசிய பிறகே அங்கிருந்து நகருவோம் என்று பதில் அளித்தனர்.
பாதுகாப்பு கேட்டு மனு
இதையடுத்து போலீசார் அவர்களை கலெக்டர் ஷில்பாவிடம் அழைத்து சென்று கோரிக்கை மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 2 பேரை அரிவாளால் வெட்டியதுடன் வீட்டையும் சூறையாடி விட்டனர். தற்போது நாங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல், 4 நாட்களாக பஸ்நிலையத்தில் தங்குகிறோம். எங்களையும் தாக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்களுக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே சாப்பிடாததால் மயங்கி விழுந்த 2 பெண்களுக்கு போலீசார் உணவு வசதியும் செய்து கொடுத்தனர்.
இந்த சம்பவம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story