தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் நெல்லையில், 3-ந் தேதி நடக்கிறது


தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் நெல்லையில், 3-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

25 சதவீத அரசு மானியம்

நெல்லை மாவட்ட தொழில் மையத்தில், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 2018-19-ஆம் ஆண்டுக்கு மட்டும் நெல்லை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 25 சதவீத அரசு மானியத்துடன் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

இணையதள முகவரி

இந்த திட்டத்தில் பயனடைய குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், 45 வயது வரை உள்ள சிறப்பு பிரிவினரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதில் முதலீட்டாளரின் பங்கு பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு 5 சதவீதமும் ஆகும். சிறப்பு பிரிவினர் என்பது பட்டியல் இனம், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு, சிறுபான்மையினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோராவர். இத்திட்டத்தில் கடன் பெற www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்

இத்திட்டத்தில் பலசரக்கு, எலக்ட்ரிக்கல் கடை, மருந்து கடை போன்ற வியாபார நிறுவனங்கள் தொடங்கவும், ஜெராக்ஸ், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், கணினி மையங்கள், தையல், அழகுநிலையம் போன்ற சேவை தொழில் தொடங்கவும், சிமெண்டு, செங்கல், பேவர்பிளாக், மின்விளக்குகள், காகித பைகள், மண்பாண்டங்கள் தயார் செய்தல் போன்ற தொழில்களும் தொடங்கலாம்.

மேலும் இத்திட்டம் பற்றிய விளக்கங்கள், தொழில் முனைவோர் ஆலோசனை பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய உதவி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story