தடையை மீறி தீப மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரால் பரபரப்பு
திருவண்ணாமலையில் தடையை மீறி தீப மலையில் ஏறிய 6 பெண்கள் உள்பட 12 வெளிநாட்டினரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் அண்ணாமலை என்று அழைப்படும் தீப மலை உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீப திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலும் தீபத்திருவிழாவின் போது இந்த மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்படும்.
இந்த மலையில் ஏற மாவட்ட வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் யாருக்கும் தெரியாமல் மலை மீது ஏறி வழி தெரியாமல் சிக்கி கொள்கின்றனர். பின்னர் தகவலறிந்து வனத்துறையினர் மலைக்கு சென்று கடுமையான போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு வருவது தொடர் கதையாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரும், ரஷியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மலை மீது ஏறி வழிதவறி சென்று ஓரிரு நாட்கள் கழித்து வனத்துறையினர் அவர்களை மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் அருகில் கந்தாஸ்ரமம் வழியாக வெளிநாட்டினர் சிலர் தீப மலை மீது சென்றதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரகர் மனோகரன், வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் விரைந்து சென்றனர்.
அதற்குள் வெளிநாட்டினர் மலையில் பாதி அளவில் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை மலையில் இருந்து மீட்டு திருவண்ணாமலை வனச்சரகர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அதில் 6 பெண்கள் உள்பட 12 பேர் இருந்தனர்.
அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஐரோப்பியா கண்டத்தை சேர்ந்த லித்துவேணியாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம், வழிகாட்டி (கைடு) யாரும் உங்களுடன் வந்தார்களா? என்று விசாரணை நடத்தினர்.
அப்போது வெளிநாட்டினரில் 2 பேர் அவர்களது செல்போனில் வனத்துறையினரை வீடியோ எடுத்தனர். இதை கண்டு ஆத்திரம் அடைந்த வனத்துறையினர், அவர்களின் செல்போனில் உள்ள பதிவுகளை அழித்தனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் ‘இனிமேல் மலைக்கு செல்ல மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story