விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்: கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு


விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்: கன்னியாகுமரியில் நிபுணர் குழு ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 28 Sept 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார் திட்டம் தொடங்குவது தொடர்பாக நிபுணர் குழு நேற்று நேரில் ஆய்வு செய்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு ரூ.120 கோடியில் ரோப் கார் இயக்கப்படும் என்று நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையே ரோப் கார் அமைப்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக மும்பையில் இருந்து சிறப்பு நிபுணர் குழு நேற்று கன்னியாகுமரி வந்தது.

இந்த குழுவில் மும்பையில் உள்ள இந்திய துறைமுக ரெயில்வே கழக பொதுமேலாளர் (மெக்கானிக்கல்) சஞ்சீவ் மித்ரா, துணை பொது மேலாளர் ரமேஷ்பாபு, டெல்லி சாப்மேன் டைலர் இந்தியா நிறுவன இயக்குனர் சப்னாகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேரில் சந்தித்து திட்டம் குறித்து பேசினார்.

தொடர்ந்து நிபுணர் குழுவினர் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை பார்வையிட்டு 3 இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை, கடற்கரையில் உள்ள ஒளி, ஒலி காட்சி வளாகம், கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தின் பின்பகுதி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பிறகு தளவாய் சுந்தரம் கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார் இயக்கப்படும் என்றும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல்வழி பாலம் அமைக்கப்படும் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து மும்பையில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் குழு ரோப் கார் இயக்கப்படுவதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த திட்டம் குறித்த ஆய்வு அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் ஒப்படைத்த பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படும். திட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் முடிக்கப்படும். திருவள்ளுவர் சிலைக்கோ, கடற்கரைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

இந்திய துறைமுக ரெயில்வே கழக பொதுமேலாளர் (மெக்கானிக்கல்) சஞ்சீவ் மித்ரா கூறுகையில், ரோப் கார் அமைக்கும் பணி தொடக்க நிலையில் உள்ளது. டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள எங்களது என்ஜினீயர் சப்னாகுமார் பாலம் மற்றும் ரோப்கார் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளார். ரோப் கார் அமைப்பதற்கும், இரண்டு பாறைகளுக்கு இடையே கடல் வழிப்பாலம் அமைப்பதற்கும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி நடைபெறுவதற்கு தமிழக அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியின் போது, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு) மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story