போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Sep 2018 9:45 PM GMT (Updated: 27 Sep 2018 8:34 PM GMT)

உமராபாத்தில் சாராய வியாபாரத்தை தடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 


உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் சாராய பாக்கெட்கள் கும்பல், கும்பலாக கிடக்கும். ஆந்திர மாநில எல்லையோர பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

ஒரு சில பகுதிகளில் 3 பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என தள்ளுபடி விலையில் சாராயம் விற்கும் நிலையும் உள்ளது. இதனால் உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆம்பூர் அருகே மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் சாராயம் விற்க கூடாது என சாராய வியாபாரிகளை எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி சாராயம் விற்பனை நடந்து வருகிறது. சில நேரங்களில் சாராய வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் உமராபாத் போலீசில் புகார் தெரிவித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் எதிரே திடீரென ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டு சென்றனர்.

சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story