மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 28 Sept 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 35). தொழிலாளி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது வீட்டிற்கு முருகேசனின் மகளுடன் படித்த, அவரது தோழியான 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றார்.

அப்போது தனது வீட்டிற்கு வந்த மகளின் தோழியிடம் ஆசை வார்த்தை கூறி, முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அந்த சிறுமியை அழைத்து கொண்டு முருகேசன் வெளியூர் சென்று விட்டார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி மீட்கப்பட்டார். தன்னை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கடத்தியதாக சிறுமி சார்பில் 30.6.2016 அன்று தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Next Story