பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிக்க திட்டம்?


பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிக்க திட்டம்?
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

பெங்களூரு மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

130 வாக்காளர்களின் ஓட்டு

பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்குகிறது. போட்டி இருந்தால், பிற்பகலில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மேயர் மற்றும் துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்தலில் 198 வார்டு கவுன்சிலர்களுடன் பெங்களூருவை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. அதனால் இந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 259 ஆக உள்ளது. இதில் வெற்றி பெற 130 வாக்காளர்களின் ஓட்டு தேவைப்படுகிறது. மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 127 வாக்காளர்களின் ஆதரவும், பா.ஜனதாவுக்கு 124 வாக்காளர்களின் ஆதரவும் உள்ளது.

பா.ஜனதா ரகசிய திட்டம்

இது தவிர சுயேச்சை கவுன்சிலர்கள் 8 பேர் உள்ளனர். மேயர் தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள் இந்த சுயேச்சை கவுன்சிலர்கள் தான். இந்த 8 பேரும் காங்கிரஸ் வசம் தான் இருந்தனர். அதில் திடீரென 2 கவுன்சிலர்கள் திடீரென பா.ஜனதாவுக்கு தாவிவிட்டனர். இது காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் காங்கிரசுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க பா.ஜனதா ரகசிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த 20 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அதனால் இன்றைய தேர்தலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேற உள்ளது.

கொறடா உத்தரவு

காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் கட்சியின் வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்றும், கட்சி மாறி வாக்களிக்கக்கூடாது என்றும் அக்கட்சியின் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே போல் பா.ஜனதா சார்பில் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுயேச்சை கவுன்சிலர்கள் 6 பேர் பிடதியில் உள்ள ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா ஆகியோரும் தங்கினர். அவர்கள் இன்று காலை அங்கிருந்து தனி வாகனத்தில் நேரடியாக தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். மேயர் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மாலை பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குறுக்கு வழியில்...

சுயேச்சை கவுன்சிலர்கள் 8 பேரும் எங்களுடன் தான் இருந்தனர். அதில் ரமேஷ் மற்றும் ஆனந்த்குமார் ஆகிய 2 பேரை பா.ஜனதாவினர் அழைத்து சென்றுவிட்டனர். ஆனாலும் அவர்களின் ஆதரவும் எங்களுக்கு தான் கிடைக்கும். போதிய பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும், குறுக்கு வழியில் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கடும் போட்டி

பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் செய்தியாகும் என்பதாலும், ஆண்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாலும், இந்த மாநகராட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

Next Story