பங்காருபேட்டை அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதல்: ராணுவ வீரர் உள்பட 4 பேர் சாவு


பங்காருபேட்டை அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதல்: ராணுவ வீரர் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 28 Sept 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டை அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்,

பங்காருபேட்டை அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் சாவு

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா அனிகானஹள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலையில் எதிரே வந்த காரும், இந்த காரும் நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 2 கார்களும் உருக்குலைந்தன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பங்காருபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்களில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் எதிரே வந்த காரில் இருந்தவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது.

ராணுவ வீரர்

இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர்கள் கோலார் தங்கவயல் சாம்பியன் எப் பிளாக் பகுதியை சேர்ந்த பரத்குமார்(38), ரமேஷ்பாபு(39), பாபு(38), ரிகோ(36) என்பது தெரியவந்தது. இதில் பரத்குமார் ராணுவ வீரர் ஆவார்.

காஷ்மீரில் பணியாற்றி வந்த பரத்குமார் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்ததும், அவர் விடுமுறை முடிந்து பணிக்கு செல்வதற்காக பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்று அங்கிருந்து காஷ்மீருக்கு செல்வதற்காக, பெங்களூரு விமான நிலையம் நோக்கி காரில் தனது நண்பர்களுடன் சென்றதும், அப்போது கார் விபத்தில் சிக்கி பரத்குமார் உள்பட 4 பேரும் பலியானதும் தெரியவந்தது.

சோகம்

இதன்பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியான 4 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்களும், குடும்பத்தினரும் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சாம்பியன் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story