அனைத்து துறைகளிலும் முதலிடத்தை பிடிக்க இணைந்து பணியாற்றுங்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
சின்னஞ்சிறிய மாநிலமான புதுவை கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு என அனைத்து துறைகளிலும் முதலிடத்தை பிடிக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு புதுவையில் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டு விழா நேற்று காலை அரசு பொது மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலு முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வருகிறோம். கிராமம், நகரம் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சுகாதார திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. புதுவை தான் முன்னோடி மாநிலமாக பல திட்டங்களை செயல்படுத்துவதாக மத்திய அரசே அறிவித்துள்ளது. பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் மட்டுமல்லாமல் புதுவை அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
சேதராப்பட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு என அனைத்து துறைகளிலும் முதலிடத்தை பிடிக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். செழியன் தலைமையிலான மருத்துவ குழு சிறப்பான சிகிச்சைகளை புதுவை மக்களுக்கு அளித்து வருகிறது.
புதுவையில் இருதய அறுவை சிகிச்சை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்தகுழு அரசு மருத்துவமனையில் இன்னும் அதிகமாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இருதயநோய், புற்றுநோய், ரத்தநாள நோய்கள் போன்றவை தேசிய அளவிலான நோய்களாக உள்ளன. இந்த நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தொடர்ந்து நிதிஉதவி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story