விவசாய நிலங்களில் வளர்க்க 2 லட்சம் மரக்கன்றுகள்


விவசாய நிலங்களில் வளர்க்க 2 லட்சம் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பட்டா நிலங்களில் வளர்க்க 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய பட்டா நிலங்களில் மரங்களை வளர்த்து பசுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. அதையொட்டி திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் தேக்கு, வேங்கை, மா, ரோஸ்வுட், பூவரசு மற்றும் செம்மரம் போன்ற பயனுள்ள சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் போளூர் தாலுகா முடையூர், செங்கத்தை அடுத்த கரியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனவியல் மையங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளன.

ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் 2,500 மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, தங்களுடைய பட்டா நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்பும் விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்கள், வங்கிக்கணக்கு புத்தக முன் பக்க நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் தென்மாத்தூரில் உள்ள வனவியல் மையம் மற்றும் செங்கம் கரியமங்கலம், போளூர் முடையூர் ஆகிய இடங்களில் உள்ள வனவியல் மையங்களை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றில் செம்மரம், ரோஸ்வுட் ஆகிய மரங்களை வெட்டும்போது மட்டும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் மற்ற வகை மரங்களின் பயன்களை பெறுவதற்கு வனத்துறையின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி, பரவலாக மழை பெய்துள்ளது. எனவே இந்த சமயத்தில் மரக்கன்றுகளை நடுவது பயனுள்ளதாக அமையும். எனவே விவசாயம் செய்ய முடியாத நிலங்கள், தரிசு நிலங்கள், பயிர் சாகுபடி செய்ய முடியாது என கைவிடப்படும் விளை நிலங்களில் இதுபோன்ற பயனுள்ள மரக்கன்றுகளை நடவு செய்வது, விவசாயிகளுக்கு நீண்ட கால பயன்தரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story