ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து 2 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு
ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம்,
ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகத்தில் நேற்று ஒருநாள் மருந்து வணிகர்கள் தங்களது மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகரில் உள்ள 100 மருந்து கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் மருந்து கடைகளை அதன் வணிகர்கள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர மருந்து மொத்த விற்பனையாளர்களின் கடைகள், குடோன்களும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் மருத்துவமனைகளின் வளாகத்தில் இயங்கும் மருந்து கடைகள் மட்டும் நேற்று வழக்கம்போல் திறந்திருந்தன. இருப்பினும் மற்ற இடங்களில் உள்ள மருந்து கடைகள் அனைத்துமே மூடப்பட்டிருந்ததால் சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த கடைஅடைப்பு போராட்டத்தினால் நேற்று ஒரே நாளில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் அருணாசலம், விஜயகுமார், இணை செயலாளர்கள் அன்பழகன், செந்தில்நாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவேந்திரன், தண்டபாணி, ஆறுமுகம், முத்துக்கருப்பன், குறிஞ்சிவளவன், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story