ஆன்–லைன் வணிகத்தை எதிர்த்து மருந்து கடைகள் அடைப்பு; ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஆன்–லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து பொள்ளாச்சியில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
ஆன்–லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று மருந்துகள் அடைக்கப்பட்டன. ஆஸ்பத்திரிகளில் செயல்படும் கடைகள் மட்டும் திறந்து இருந்தன. இதன் காரணமாக மருந்துகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் கிராமங்களில் இருந்து பொள்ளாச்சிக்கு மருந்து வாங்க வந்தவர்கள் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த கடை அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இதுகுறித்து மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–
ஆன்–லைன் மூலம் மருந்து விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த தொழிலை நம்பி உள்ள மருந்து வணிகர்கள், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆன்–லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க உள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி தாலுகாவில் 200 கடைகளும், கிணத்துக்கடவு தாலுகாவில் 25 கடைகளும் சேர்த்து 225 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக சுமார் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.