வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:15 AM IST (Updated: 29 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை தடை செய்யக்கோரி வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பேரமைப்பின் மண்டல தலைவர் டி.கிருபாகரன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் ராஜு, தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள், ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரும்பாலான வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். ஒருசிலர் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். இந்திய வணிகர்களை பாதுகாக்க வேண்டும். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்வதால் விலைவாசி உயர்கிறது. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.

அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை 5 சதவீதம் மற்றும் 12 சதவீதம் மட்டுமே என மாற்றம் செய்து அமல்படுத்த வேண்டும். பணமில்லாத பரிவர்த்தனையை எளிதாக்க வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் சோதனை நடத்தி வியாபார நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Next Story