நெல்லையில் குறைதீர்க்கும் கூட்டம்: அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்
நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, உதவி கலெக்டர்கள் மைதிலி (நெல்லை), ஆகாஷ் (சேரன்மாதேவி), சவுந்தர்ராஜன் (தென்காசி), மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
69 சதவீதம் அதிக மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 556.22 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 69 சதவீதம் அதிகமாகும். இதனால் அணைகளில் போதுமான தண்ணீர் இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு ராபி பருவத்தில் நெல் 60 ஆயிரம் எக்டர் பரப்பளவிலும், மக்காச்சோளம் 12 ஆயிரம் எக்டர் பரப்பளவிலும், பயிறு வகைகள் 36 ஆயிரம் எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது விதைகள், இடு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு தரமான இடுபொருட்கள், விதைகள் வழங்காதவர்கள் மீதும் வேளாண்மை துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
வனவிலங்குகளால் பாதிப்பு
விவசாயிகள்:- சிவகிரி, வடகரை, கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை பகுதிகளில் விளைநிலங்களை வனவிலங்குகள் நாசம் செய்து வருகின்றன. இந்த விளைநிலங்களை பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த மின்வேலிகளை உரிய முறையில் பராமரிக்கவும், வனப்பகுதிகளை ஒட்டி ஆழமான அகழிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பன்றிகள் விளை நிலங்களை அதிக அளவு சேதப்படுத்துகின்றன. இரவு நேரம் முழுவதும் பயிர்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
அதிகாரிகள்:- விளைநிலங்கள் பாதிக்கப்படுவதற்கு ஏற்ப உரிய நஷ்டஈடு வழங்கப்படுகிறது. வனவிலங்கு பட்டியலில் இருந்து பன்றிகளை நீக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
விவசாயிகள் முற்றுகை
தொடர்ந்து விவசாயிகள், செங்கோட்டை, புளியரை பகுதியில் கடந்த மாதம் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் 60 சதவீதம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவை முற்றுகையிட்டு, அழுகிய நெற்பயிர்களை காட்டினர்.
அப்போது கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதில் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், நெற்பயிர்களை கீழே தூக்கி வீசி எறிந்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகளை கலெக்டர் சமாதானம் செய்தார்.
உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை
அப்போது அவர் பேசுகையில், “பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். காப்பீடு செய்யாத பயிர்களுக்கு காப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையான், கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், திருக்குறுங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றினால் சுமார் 1 லட்சம் வாழைகள் சாய்ந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாழைக்கு 100 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்போது கலெக்டர் ஷில்பா கூறுகையில், வாழைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த வாழைகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினால் வீட்டு அடமான பத்திரம் கேட்கிறார்கள். விவசாயிகளுக்கு இப்படி நெருக்கடி கொடுத்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும்?
துறை வாரியாக நடவடிக்கை
கலெக்டர்:- ரூ.1 லட்சம் வரையிலான கடனுக்கு வீட்டு அடமான பத்திரம் தேவையில்லை. அப்படி யாராவது கேட்டால் அந்த அதிகாரிகள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டம் முழுவதும் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கிய விவசாயிகள் எத்தனை பேரிடம் இருந்து வீட்டு அடமான பத்திரம் வாங்கப்பட்டு உள்ளது என்று பட்டியல் எடுப்போம். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
கண்காட்சி
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் உபகரணங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், அரசு அதிகாரிகள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story