திருமூர்த்தி அணையின் உபரிநீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை


திருமூர்த்தி அணையின் உபரிநீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 29 Sept 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையின் உபரிநீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். மேலும், கோரிக்கையை மனுக்களாகவும் கொடுத்தனர்.

அந்த வகையில் விவசாயிகள் முன்வைத்து பேசிய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:–

தளி வாய்க்காலில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சடையபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் நீரோடைகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தனியார் பன்னாட்டு காற்றாலை நிறுவனம் மின்கம்பங்கள் நட்டு மின்பாதை அமைத்து வருகிறது. இதற்கு அனுமதி அளித்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 23–ந்தேதி குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உதவி இயக்குனரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடுமலை தாலுக்கா திருமூர்த்தி அணையின் உபரிநீர் வழிபாதை முழுவதும் தென்னை மரங்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அணை நிரம்பி உபரி நீர் திறக்கும் போது உபரிநீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்தி நகர் பொன்னாலம்மன் சோலை பகுதியில் பெரும் பகுதி விவசாய நிலங்களில் தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், தீவனப்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து தென்னங்கன்றுகளை பிடுங்கியும், பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.

மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளையும் தாக்கி வருகிறது. எனவே காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் பத்திர பதிவு அலுவலகங்களை திருப்பூர் நகரின் மையப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மாற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அனைவரும் பயன்பெறும் வகையில் நகரின் மையப்பகுதியிலேயே அலுவலகம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம், குண்டடம் ஆலம்பாளையம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சின்னக்கரை மற்றும் ராஜவாய்க்காலுக்கு செல்லும் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். இந்த கால்வாயை சுத்தம் செய்து நீர் தேக்கி வைப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் இதன் மூலம் பயன்பெறும். இதனால் இதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து தீர்வு காணப்படும் என்றும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.


Next Story