பல்லடம் அருகே மில் கண்காணிப்பாளரை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது


பல்லடம் அருகே மில் கண்காணிப்பாளரை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2018 4:30 AM IST (Updated: 29 Sept 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே மில் கண்காணிப்பாளரை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்,

விருதுநகர் மாவட்டம் வீரக்குடியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி (34). இவர்களுக்கு குணநிதி (15) மற்றும் தயாநிதி (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நாகராஜ் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் ஆர்.கே.கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு சித்தம்பலம் பகுதியில் உள்ள சுலோச்சனா காட்டன் மில்லில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13–ந்தேதி இரவு 8 மணிக்கு நாகராஜ் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் அன்று நள்ளிரவு 11.45 மணிக்கு மில் வளாகத்தில் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை மற்ற தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது தலையின் பின் பகுதியில் கட்டையால் தாக்கப்பட்டு நாகராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பற்றிய தகவல் தெரியவந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து சென்று நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு நாகராஜை அடித்துக்கொன்ற கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார் என்று வி£ரித்து வந்தனர். மேலும் மில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் நாகராஜ் தாக்கப்படும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து பார்த்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தபோது நாகராஜை அடித்துக்கொன்றது அதே மில்லில் வேலை பார்த்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புத்து ஓரான் மகன் கார்த்திக் ஓரான் (25) என தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் ஓரானை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது;–நாகராஜ் வேலை பார்த்த பிரிவில்தான், கார்த்திக் ஓரானும் வேலை செய்து வந்துள்ளார். நாகராஜ், பணியின் போது கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. இது கார்த்திக் ஓரானுக்கு பிடிக்க வில்லை. இதனால் நாகராஜிக்கும், கார்த்திக் ஓரானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மில்லில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே நாகராஜ் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்துள்ளார். அப்போது அங்கு மறைவாக நின்று கொண்டிருந்த கார்த்திக் ஓரான், முன் விரோதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு தான் வைத்திருந்த மரக்கட்டையால், நாகராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் இறந்து விட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது கார்த்திக் ஓரான் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டு கார்த்திக் ஓரானை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story