கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:15 AM IST (Updated: 29 Sept 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னப்பன், மாவட்ட பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சூப்பர் மார்கெட் சங்க தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்து வணிகர்கள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டிட வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய மத்திய, மாநில அரசுகள் இவ்வேளையில் அமெரிக்க நிறுவனத்தை வாங்கி பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து, இந்திய சில்லரை வணிகத்தை மறைமுகமாக கைப்பற்றுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தில் வணிகர்களை பாதிக்கின்ற சட்ட விதிகளில் உரிய மாற்றங்கள் செய்திட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தில் 28 சதவீதம், 18 சதவீதம் வரியை முழுமையாக அகற்றி அதிகபட்சம் 5 சதவீதம், 12 சதவீதம் வரியை மட்டுமே அமல்படுத்திட வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவங்கள் தாக்கல் செய்வதை மேலும் எளிமைப்படுத்திட வேண்டும். இ-வே பில் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்திட வேண்டும்.

ஊதியமில்லா அரசு ஊழியர்களாக செயல்படும் வணிகர்களின் நலன் கருதி ஓய்வூதியம் மற்றும் இழப்பீட்டு நிவாரணங்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வேலூர் மண்டல தலைவர் கிருஷ்ணன், வேலூர் மாவட்ட செயலாளர் ஞானவேலு, வேலூர் மாவட்ட பொருளாளர் மணி, மாநில துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட மருத்துவ வணிகர் சங்க தலைவர் முரளி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story