சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: ஆண், பெண் சம உரிமையை உறுதிபடுத்தி உள்ளது - கவர்னர் கிரண்பெடி
சபரிமலை விவகாரத்தில் ஆண், பெண் சம உரிமையை சுப்ரீம் கோர்ட்டு உறுதிபடுத்தி உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி வரவேற்பு தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அங்குள்ள கடைக்காரர்களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் குப்பை தொட்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இந்த வீதிகளை சேர்ந்த கடைக்காரர்களுக்கு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் சிவா எம்.எல்.ஏ., மாநில வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நூறாண்டு காலமாக மனிதர்களுக்குள் இருந்த தவறான பிரிவினை நீக்கப்பட்டு உள்ளது. ஆண், பெண் இருபாலருக்கு இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்–பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், தகாத உறவு குற்றம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.