புதிய பஸ்நிலையம் அமையும் இடம் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு


புதிய பஸ்நிலையம் அமையும் இடம் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2018 4:30 AM IST (Updated: 29 Sept 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் புதிய பஸ்நிலையம் அமையும் இடத்தை சட்டமன்ற மனுக்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவின் தலைவரும் அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பென்னாகரம் தாலுகா ஒரப்பாச்சியூரில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தார்சாலை அமைக்கக்கோரிய இடம், பாடி ஊராட்சி சவுளூரில் தார்சாலை புதுப்பித்தல் பணி, பாடி-செக்கோடி சாலையில் இருந்து ஆண்டிக்கொட்டாய் வழியாக சின்ன சவுளூர் சாலையை புதுப்பிக்கும் பணி, நூலஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தர்மபுரி-பென்னாகரம் சாலையில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்காக தனியார் 10 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளனர். இங்கு ரூ.39.16 கோடியில் புதிய புறநகர் பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தையும், புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்ல அமைக்கப்பட உள்ள சாலைகள் தொடர்பான வரைபடத்தையும், சட்டமன்ற மனுக்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சட்டமன்ற மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் மனுக்கள் குழுவின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். மனுக்கள் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஆறுமுகம், சக்ரபாணி, துரை.சந்திரசேகரன், சித்ரா, தனியரசு, முருகன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் கருணாநிதி, பிரிவு அலுவலர் பாலசீனிவாசன் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோரும் பங்கேற்றனர். ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த பதில்கள் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மனுக்கள் குழுவின் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், பஞ்சப்பள்ளியிலுள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கும், இந்த மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித்தரவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொழில் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 49 கோரிக்கை மனுக்களின் மீதும், 37 மறுஆய்வு செய்யப்பட்ட மனுக்கள் மீதும் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதும், வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று பேசினார்.

பென்னாகரம் தாலுகா ஒரப்பாச்சியூரில் ஆய்வு மேற்கொண்டபோது வீட்டுமனைகள் வழங்க வேண்டி மனுக்கள் குழுவிடம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதையடுத்து 18 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் ராஜேந்திரன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், உதவி கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story